நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 08, 2024

கண்கள்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 25
புதன் கிழமை


கோழி கூப்பிட எழுவதில் இருந்து நாமும் நம்முடைய குல விளக்குகள் செய்த வேலைகள் தான் எத்தனை எத்தனை!..

கிணற்றில் நீர் இறைத்தார்கள்.. குடங் குடமாக இடுப்பில் சுமந்து பெரிய பெரிய தொட்டிகளை நிறைத்தார்கள்..

மாடு கன்றுகளை அவிழ்த்துக் கட்டி இரண்டு வேளையும் பால கறந்து நாளில் ஒருமுறையாவது அங்கம் குலுங்கக் குலுங்க தயிரைக் கடைந்து வெண்ணெய் திரட்டினார்கள்.. 

கொர்.. கொர் என்று
சத்தமிட்டுக் கொண்டு காலடியைச் சுற்றி வந்த கோழியைப் பிடித்து அதன் வயிற்றுக்குள் முட்டை இருக்கின்றதா எனச் சோதித்தார்கள்.. 

கொல்லைப் புற தோட்டத்தையும் அவ்வப்போது வயற்காட்டையும் பராமரித்தார்கள்..

நங்கையர்க்கு இப்படி என்றால் இளங்காளையர்க்கு வேறு மாதிரி...

விடியலில் எழுந்து வயற்காட்டுக்குச் செல்வதும் கொல்லைக் காட்டிற்குச் செல்வதும் தோப்பு துரவு என்று சுற்றி வருவதும் வண்டியைப் பூட்டிக் கொண்டு சந்தைக்குச் சென்று, ஆக வேண்டியதைப் பார்ப்பதும்...

வயலுக்கு எரு அடிப்பதும் உழவு அடிப்பதும் கோடை என்றால் கிணற்றில் தூர் எடுப்பதும்..

பெண் பிள்ளைகள் சடங்கான பிறகு பள்ளிப் படிப்பில் இருந்து விடுபட்டாலும் குடும்பத்தின் வரவு செலவுகளை திட்டமிட  அவர்களிடம் நுட்பம் இருந்தது.. நிர்வாகத் திறன்  இருந்தது..

இதெல்லாம் போதாது என்று சைவம் புலால் என இரண்டு வகை உணவு தயாரிப்பதிலும் வல்லமை கொண்டிருந்தார்கள்..

சிறு தீனிக் கடைகள் இருந்தாலும் கடைகளில் வாங்கித் தின்பதை விரும்பியதில்லை.. அதை ஒரு கௌரவமாகவும் நினைத்ததில்லை..

நெல்லை உலர்த்தி உரலில் இட்டுக் குத்தி அரிசி ஆக்குவதில் இருந்து விடுதலை பெற்றிருந்தாலும் அவல் தயாரிப்பதில் ஆற்றல் பெற்றிருந்தார்கள்..

சாதாரண குடும்பத்துப் பெண்கள் வயல் வெளிகளில் வேலை செய்வதிலும் திறமை பெற்றிருந்தார்கள்..

கடுமையான கட்டிட வேலைகளையும் செய்து பிழைக்க வேண்டியதாகவும் அப்போதைய சூழ்நிலை..

இன்றைக்கு பெரும்பாலும் அப்படி இல்லை.. எல்லாம் பழங்கனவாகப் போய்விட்டன.. 

ஆறேழு பிள்ளைகளைப் பெற்றுக் கொண்ட  பின்னும் -
ஆரோக்கியமாகவே  இருந்தனர்..

இன்றைக்கு பிள்ளை பெறுவதற்கு முன்பே அவர்களுக்குப் பிரச்னைகள்...
பிள்ளை பெறுவதற்கே 
பிரச்னைகள்..

ஏன்?.. எதனால்?..

பெண்களுக்கு என்றே புதுசு புதுசா வியாதிகளைச் சொல்கின்றார்கள்.. 
அவற்றை உடனுக்குடன் சரிசெய்வதற்கு என்று சிறப்பு மருத்துவங்கள்..

இதோ உங்கள் ஊரில்!...
இதோ உங்கள் தெருவில்!...
- என்ற நிலைக்கு வந்து விட்டது..

இதோ உங்கள் வீட்டில்!...
- என்ற நிலையும் விரைவில வந்து சேரலாம்..


இனிய இல்லறத்திற்கு ஆணும் பெண்ணும் என்றாலும் எந்த ஒரு ஆணுக்கும் பெண் தான் ஆதாரம்.. அடிப்படை..

தாய்க்குப் பின் தாரம் என்றது தமிழ்..

அதனால் தான், பெண் - இல்லாள் எனவும் இல்லத்தரசி எனவும் சிறப்பிக்கப்பட்டாள்..

ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்..

என்றும்

சுமைதாங்கி சாய்ந்தால்
சுமை என்ன ஆகும்
மணி தீபம் ஓய்ந்தால்
ஒளி எங்கு போகும்..

என்றும் 
இல்லாளின் பெருமைக்குப் புகழ் பாடினார் கவியரசர்..

இளம் வயதிலேயே 
பெண்கள் பாரம்பரிய  சமையல் கலையைப் பழகி அம்மியில்  தேங்காய் அரைத்து எடுப்பது உடலுக்கு நல்லது.. 

அம்மியில் அரைப்பது மிகச் சிறந்த உடற்பயிற்சி.. 

1990 களுக்கு முன்பு வரை  கேட்டிராத நோய்கள் எல்லாம் இப்போது பேருந்துகளில் விளம்பரங்கள் என்று - ஊர் முழுக்க சுற்றி வருகின்றன..

பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை தொலைக்காட்சியில்
மனதை அதிரடிக்கின்றன.. 

இளமையில் ஓரளவுக்கு நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டால் -
நாற்பது ஐம்பது வயதுகளில் மருத்துவமனை வாசலில் காத்துக் கிடப்பது பெருமளவுக்குக் குறையும் என்பதில் ஐயம் இல்லை..

ஓரிருவர் அப்படியும் இப்படியும் இருந்திருக்கலாம்.. 

எப்படியாயினும் பெண்களே ஒவ்வொரு மனிதனுக்கும் கண்கள்..

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்...

என்றார் ஐயன் திருவள்ளுவர்..

தற்காத்துத் தற்கொண்டான் பேணி - என்பதை ஆரோக்கியமானவற்றை உண்பதற்கும் தரமான உடைகளை உடுத்துவதற்கும் கொள்ளலாம்..

தர்மத்திற்கு நாலு பேர் என்றால்
துரியோதனத்துக்கும்
துச்சாதனத்துக்கும் நூறு பேர் என்பது உலக நியதி..

பங்களா என்றாலும் ஓலைக்குடிசை என்றாலும் கொல்லைக்கு என்று அவ்வளவு தூரம் சென்றது பழங்கதை..

இன்று நவீன வாழ்க்கை முறையில் எல்லாம் தலை கீழ்.. 

இன்றைய நாளில் திட்டமிடல் என்பது - 

கடன் திருவிழாவில் கடனாளி ஆவதும், 



எட்டு ஊர் தீனிகளையும் வீட்டுக்குள் வரவழைத்துத் தின்று தீர்ப்பதும் தான்..

நடு வீட்டுக்குள் என்பதும் மலையேறி
உள்ளங்கையில் அல்லவா உலகம்!..

இளந்தலைமுறைக்கு
இதையெல்லாம் யோசிப்பதற்கு நேரம்  இல்லை என்றாலும் நல்லதே நடக்கட்டும்!..

நம்முடைய நலம்
நம்முடைய கைகளில்..
**

ஓம் நம சிவாய நம ஓம்
***